×

2023-24ம் கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடதிட்டம் அமல்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: 2021 செப்டம்பர் 30ம் தேதி, நவம்பர் 1ம் தேதி ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம் 1992 பிரிவு 10 (2) (பி) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 922 பேராசிரியர்களை பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பிஎஸ்சி ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், பிஎஸ்சி ஐஓடி உள்ளிட்ட பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களை பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுக்களின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அனுப்பி வைத்தன. இதன் அடிப்படையில், 90% உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கீழ்க்காணும் 5 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன: பகுதி I மொழி, பகுதி II ஆங்கிலம், பகுதி III முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்கள், பகுதி IV திறன் மேம்பாட்டுப் பாடங்கள், பகுதி V மதிப்புக் கூட்டுக்கல்வி. இப்பாடத் திட்டத்தில் உள்ள பகுதி I, பகுதி II, பகுதி IIIல் உள்ள விருப்பப் பாடங்கள் பகுதி IV, பகுதி V ல் உள்ள பாடங்களில் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம். பாடத்திட்டத்தில் பகுதி IIIல் உள்ள முக்கிய பாடங்கள் 75 சதவீதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மாணவர் நலன் கருதி அமைக்கப்பட்ட இம்மாதிரி திட்டம் கீழ்க்காணும் உரிமைகளை பாதுகாக்கிறது:
* பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களையும், விருப்பப் பாடங்களையும் செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கிடையே மாற்றிக் கொள்ளலாம்.
* பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகள் தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. இந்த கல்வி ஆண்டு முதல் (2023-24) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும். மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துகள் கேட்டு தீர்வு காணப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

The post 2023-24ம் கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடதிட்டம் அமல்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Syllabus ,Amal ,Chennai ,Minister of Higher Education ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஜாமீன் பெற கால அவகாசம் கேட்டு அமைச்சர்...